ஆளுனர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகாரை குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில காலமாக தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் ஆளும் திமுக அரசுடன் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையில் சில வார்த்தைகளை பேசாமல் விட்டதும், அதை தொடர்ந்து முதல்வர் ஆளுனருக்கு எதிராக தீர்மான நிறைவேற்றியதால் ஆளுனர் வெளியேறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் சட்டமன்றத்தில் ஆளுனர் மரபு மீறி நடந்து கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவர் திரௌபெதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் நேரடியாக குடியரசு தலைவரிடம் அளித்தனர்.
இந்நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகாரை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.