தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியை துவங்கியுள்ளது பிரசாந்த் கிஷோரின் ஐ - பேக் நிறுவனம்.
வரும் தேர்தலில் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்தார். பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து திமுக மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கமோ ஐ - பேக் நிறுவனம் தமிழகத்தில் தேர்தல் பணி களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியை துவங்கியுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தகவல் பகுப்பாய்வு, டிஜிட்டல் மார்க்கெட்டிங், களப்பணி, கிராஃபிக் டிசைன் அண்ட் வீடியோ, மனிதவளம், தலைமைப் பணி, ஊடகம் - மக்கள் தொடர்பு, கொள்கை ஆய்வு மற்றும் நுண்ணறிவு, நிதி - கணக்கு பராமரிப்பு, சட்டம், வரவேற்பாளர், ஆண்ட்ராய்டு மொபைல் ஆப் டெவலப்பர், டிஜிட்டல் தொழில்நுட்ப பிரச்சாரம், இணையதள வடிவமைப்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்று பல பிரிவுகளில் ஆட்கள் தேவை என குறிப்பிட்டு அதற்கு விண்ணப்பிக்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் உள்ள நிலையில் இப்போது முதலே தேர்தலுக்கான செயல்பாடுகளை ஐ - பேக் நிறுவனம் துவங்கியதால் திமுக தலைமை திருப்திகரமாக இருப்பதாக தெரிகிறது.