தபால்துறை தேர்வு இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியபோதிலும் இந்த தேர்வின் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தபால்துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தேர்வு நடத்த தடையில்லை என்றும், ஆனால் முடிவுகளை மறு உத்தரவு வரும் வரை வெளியிட கூடாது என்றும் உத்தரவிட்டது
இந்த நிலையில் வினாத்தாள் தமிழில் இல்லாததால் சர்ச்சையான தபால்துறை தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால்துறை உதவியாளர், வகைப்படுத்துநர் உதவியாளர் பணியிடங்களுக்காக மத்திய அரசு நடத்தும் இந்த தேர்வில் வினாக்கள் ஆங்கிலம், இந்தியில் இடம்பெற்றுள்ளன
சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வரும் இந்த தேர்வை தமிழகத்தில் 989 பேர் எழுதி வருகின்றனர். சென்னையில் மட்டும் இந்த தேர்வை 150 பேர் எழுதி வருகின்றனர்