பிரபல நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பாலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கரீனா கபூர் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இரவு, சைஃப் அலிகான் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குள் சத்தம் கேட்டதால் கண் விழித்து பார்த்தார். கரீனா கபூர் தனது மகன்கள் அறைக்கு சென்று விட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தபோது, சத்தம் அதிகரிக்கச் செய்ததால் ஏதோ விபரீதம் எனக் கருதி வெளியே வந்தார்.
அப்போது, வேலை செய்யும் பெண், மர்ம நபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சைஃப் அலிகான் "யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?" எனக் கேட்டபோது, அந்த மர்ம நபர், எனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்" என்று கூறினான். பின்னர் திடீரென வாக்குவாதத்தின் போது அந்த மர்ம நபர் தனது கத்தியை எடுத்து சைஃப் அலிகானை குத்தினார்.
இதனால், அவர் படுகாயம் அடைந்து, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தப்பியோடிய அந்த மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இன்று அவர் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.