அரசு பள்ளிகளில் இனிய காலை உணவாக உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று சட்டசபையில் நடந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேபோல், தமிழக பள்ளிகளில் சத்துணவு குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் மானிய தொகை ரூ.61 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், புதுமைப்பெண் திட்டத்திற்கு இதுவரை ரூ.721 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மற்றும் சென்னையில் உள்ள திருநங்கைகளுக்கு அரண் எனும் தங்கும் மையம் அமைக்க ரூ.63 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உப்புமா போடுவதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது பொங்கல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.