மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுவிலக்கு தொடர்பாக கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை எழுப்பியுள்ளது. குளிர் மாநிலங்களில் மது அருந்தலாம் என அவர் கூறியுள்ளார்.
இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மதுவிலக்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறிய கருத்து ஒரு வகையில் மதுகுடிப்பதை ஆதரிப்பது போல் இருந்தது. இதனால் அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதே தனது நோக்கம் என தெரிவித்த அவர், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்றார். அது மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வெப்ப மாநிலம் என்பதால் சாராயக் கடைகளுக்கு தடை விதிக்கலாம்.
ஆனால், குளிர் மாநிலங்களில் எப்படி தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். இது செய்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படியென்றால் தமிழகத்தில் குளிர் நிலவும் போது மக்கள் குடிப்பதை ஆதரிப்பாரா பொன்.ராதாகிருஷ்ணன். குளிர் இல்லாதா மற்ற மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு முன்வருமா? என பல கேள்விகளை எழுப்புகின்றனர் நடுநிலையாளர்கள்.