டிடிவி தினகரனுக்கு எதிராக பதிவு செய்த மனுவை எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றதை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவார் என்று கூறப்படுவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவி வகித்த நிலையில், இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், 2018 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டதால், ஜெயலலிதாவின் படத்தையும் அதிமுக கொடியையும் பயன்படுத்த தடை விதிக்க கோரி, எடப்பாடி பழனிச்சாமி சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீதிபதி இடம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு டிடிவி தரப்பு வழக்கறிஞரும் ஒப்புதல் தெரிவித்த நிலையில், வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.