Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீக்குளித்த இசக்கியை காவல்துறை அதிகாரி மிரட்டும் ஆடியோ..

தீக்குளித்த இசக்கியை காவல்துறை அதிகாரி மிரட்டும் ஆடியோ..
, புதன், 25 அக்டோபர் 2017 (15:48 IST)
திருநெல்வேலியில் கந்துவட்டி காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் மரணமடைந்த இசக்கிமுத்துவை ஒரு காவல் அதிகாரி மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர்  கடந்த 23ம் தேதி காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர். அதன் பின்னர், நான்கு பேரும் திடீரென ஆளுக்கொரு பக்கம் நின்று தீக்குளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கருவிகள் இல்லாத காரணத்தால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதனையடுத்து பலத்த காயங்களுடன் இசக்கி முத்து - சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
 
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் சுப்புலட்சுமியும் அன்றே மரணம் அடைந்தனர்.  இந்த நிலையில் இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
இசக்கிமுத்து 5 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும், நெல்லை மாவட்ட எஸ்.பி-யிடமும் அவர் தனியாக இசக்கிமுத்து புகார் மனு கொடுத்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இசக்கிமுத்துவின் உறவினர்கள் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், மரணமடைந்த இசக்கிமுத்துவை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், போலீசா உன் பொண்டாட்டிய கடன் வாங்க சொன்னது. போலீச என்ன முட்டாள்னு நினைக்கிறியா. ஏன், கலெக்டர்கிட்ட மனு கொடுக்கிற?. என்ன போலீச மிரட்ட பாக்குறியா?. நீ எங்க மனு கொடுத்தாலும் இது இங்கதான் வரும். நாங்கதான் விசாரிக்கணும். ஒழுங்கு மரியாதையா விசாரணைக்கு வந்து சேரு” என அவர் இசக்கிமுத்துவை மிரட்டுகிறார்.
 
இதுபோல், இசக்கிமுத்துவிடம் பேசிய பல போலீஸ் அதிகாரிகளின் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பதால், நெல்லைப் பகுதி போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3500 லேப்டாப்புகளுடன் சென்ற கண்டெய்னர் திடீர் மாயம்: சென்னை அருகே துணிகரம்