ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக மாற்றி, தீ வைப்புச் சம்பவங்களை அரங்கேற்றியது காவல்துறைதான் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.
பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர்.
காவல் துறையினரின் திடீா் தடியடி சம்பவத்தால், சென்னையின் சில இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெற்றன. நடுக்குப்பத்தின் சில பகுதிகளில் வாகனங்கள், கடைகள் தீக்கிரையாகின.
இந்த சம்பவத்தில், காவல் துறையினரே வாகனங்களுக்கு தீவைத்தும், சேதப்படுத்தியும், பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்துக் கூறியுள்ள குஷ்பூ, ”ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சென்னையில் மாணவர்களும், இளைஞர்களும் மிக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார்கள். 6 நாட்கள் எந்த விதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென்று 7-வது நாள் காலையில் வன்முறை எப்படி உருவானது?
பாஜக-வில் மேனகாகாந்தி ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்றும்; பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டுக்கு தடை கூடாது என்றும் வெவ்வேறு குரல்களில் ஒலிக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.