Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமலர் நாளிதழில் வந்த சட்டம் ஒழுங்கு செய்தி.. தமிழக காவல்துறை விளக்கம்..!

Advertiesment
தினமலர் நாளிதழில் வந்த சட்டம் ஒழுங்கு செய்தி.. தமிழக காவல்துறை விளக்கம்..!

Siva

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (07:26 IST)
தினமலர் நாளிதழில் வந்து படுகொலை மற்றும் சட்டம் ஒழுங்கு செய்திக்கு  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
09.09.2024 தேதி தினமலர் நாளிதழில் '6 பேர் படுகொலை! நேற்று ஒரே நாளில் அதிமுக பிரமுகர் உட்பட - கேள்வி குறியாகிறது தமிழக சட்டம் & ஒழுங்கு நிலவரம் என்று செய்தி வெளிவந்துள்ளது. இந்த ஆறு சம்பவங்களின் விவரம் பின்வருமாறு:
 
(1) 08.09.2024 அன்று தென்காசி மாவட்டம். பனவடலிசத்திரம் கா.நி, சரகம், மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த வெள்ளியப்பன் பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார். அவ்வூர் கோயில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இறந்து போன நபருக்கும். எதிரிக்குமிடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் நடந்துள்ளது. 
 
இவ்வழக்கில் எதிரிகள் இருவர் கைது. (2) 08.09.2024 அன்று இராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கா.நி. சரகம். புழுதிக்குளத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை அவரது உறவினர் பாலாஜி உள்ளிட்ட சிலர் கொலை செய்தனர். இச்சம்பவம், 29.05.2024 அன்று எதிரிகளின் உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. 
 
இவ்வழக்கில் 5 எதிரிகளும் கைது.. (3) 08.09.2024 அன்றிரவு சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜ். சாஸ்திரி நகர் கா.நி. சரகம், பெசன்ட்நகர் கடற்கரையில் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கானா பாட்டு பாடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 5 எதிரிகள் கைது. (4) 08.09.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி கா.நி. சரகம், ஆத்தூப்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் பொது மக்களுக்கு இடையூறு செய்த துரைசாமியை கண்டித்ததால் கொலை செய்யப்பட்டார். 
 
இவ்வழக்கில் துரைசாமி கைது. (5) 08.09.2024 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கா.நி. சரகம். சின்ன பாறையூரைச் சேர்ந்த பழனியை சொத்து தகராறு காரணமாக அவரது உறவினர் கண்ணாயிரம் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 எதிரிகளும் கைது. (6) 07.09.2024 அன்று கோயம்புத்தூர் மாநகர், செல்வபுரம் கா.நி. சரகம், பழைய தோட்டம் பகுதியில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் கோகுலகிருஷ்ணன் என்பவரை பிரவீன் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இவ்வழக்கில் எதிரிகள் 5 பேரும் கைது.
 
மேற்குறிப்பிட்ட அனைத்து சம்பவங்களும் சொத்து தகராறு. உறவினர்களுக்கிடையே முன்விரோதம், திடீர் ஆவேசம் போன்றவற்றால் நடைபெற்றுள்ளனவே தவிர, சாதி, மத மோதல் காரணமாகவோ, கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல. எனினும், இச்சம்பவங்களில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
 
எனவே, வீண் விளம்பரத்திற்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் மிகைப்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது உகந்ததல்ல.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடுகளின் முன்பாக நோ பார்க்கிங் போர்டு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!