நல்ல உள்ளம் கொண்ட பெண்ணிற்கு காவல்துறை ஆணையர் பாராட்டு
நல்ல உள்ளம் கொண்ட பெண்ணிற்கு காவல்துறை ஆணையர் பாராட்டு
கீழே கிடைத்த 25 பவுன் நகையை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணினை காவல்துறை ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்துள்ளார்.
ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் மைமூன்ராணி (40) தண்டையார் பேட்டையில் உள்ள உறவினர் அன்வர்கான் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன் தினம் இரவு உறவினர்களிடம் மைமூன்ராணி மெரினா கடற்கரைக்கு சென்றார். பின்னர் அனைவரும் இரவு 10 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது மைமூன்ராணி எடுத்து சென்ற நகை பை மாயமாகி இருந்தது. அதில் 25 பவுன் நகை ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம் செல்போன் ஆகியவை இருந்தது. அதனை மெரினா கடற்கரையிலே தவறவிட்டது தெரியவந்தது. இதுபற்றி இரவு 12.30 மணியளவில் மைமூன்ராணி அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் மெரினா கடற்கரையில் டீ கடை வைத்துள்ள, திருவல்லிகேணி லாக் நகரைசேர்ந்த அமுதா என்ற பெண் நேற்று காலையில் அண்ணாசதுக்கம் காவல்நிலையத்திற்கு வந்து மைமூன்ராணியின் தொலைந்து போன நகைபையை பத்திரமாக ஒப்படைத்தார். அதில் தொலைந்து போன நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பத்திரமாக இருந்தது. இதையடுத்து, காவல்துறையினர் மைமூன்ராணியை நேரில் அழைத்து, அவற்றை ஒப்படைத்தனர். இது தொடர்பாக, நல்ல உள்ளம் கொண்ட அமுதாவை நேர்மையை பாராட்டி நேரில் அழைத்து காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் வெகுமதி அளித்தார்.