கோழிகளுக்கு கொரோனா பரவியிருப்பதாக போலி செய்தியை பரப்பிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கோழிகளில் கொரோனா இருப்பதாக போலி செய்தி ஒன்று வாட்ஸப் மூலமாக வலம் வர தொடங்கியது.
அந்த செய்தியில் சேலம், நாமக்கல் பகுதிகளை சேர்ந்த கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நம்பி பலர் கோழிகளை உண்பதை தவிர்க்க தொடங்கியதால் தமிழகம் முழுவதுமே கோழி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
போலி செய்தி பரப்பியவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழி பண்ணை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் கரூரை சேர்ந்த பெரியசாமிதான் இதை செய்தவர் என்று கண்டறிந்து கைது செய்துள்ளனர்.
கொரோனா பீதியால் கோழி விலை குறைந்துள்ள நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சல் மேலும் கோழி வியாபாரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.