சென்னையில் உள்ள 2 இளைஞர்கள் கட்டு கட்டாக பணத்தை ஏடிஎம் மிஷினில் டெபாசிட் செய்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அந்த இரண்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது சில திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஏடிஎம்-ல் இரண்டு இளைஞர்கள் நீண்ட நேரம் பணத்தை டெபாசிட் செய்து கொண்டிருந்தனர். இதனால் அந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் விரைந்து வந்து ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்து கொண்டிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்த போது பிராட்வே பகுதியில் உள்ள ஒரு தொழில் அதிபரின் பணத்தை தான் தாங்கள் டெபாசிட் செய்வதாகவும் இதற்காக தங்களுக்கு தினமும் 600 ரூபாய் சம்பளம் என்றும் கூறியதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் தினந்தோறும் பணத்தை டிபாசிட் செய்து வருவதாகவும் ஆலந்தூரில் டெபாசிட் செய்து வரும் போது தான் போலீசாரிடம் பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த இரண்டு இளைஞர்களிடம் பணத்தை கொடுத்து விட்ட தொழிலதிபர் யார் என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.