ஸ்ரீவில்லிப்புத்தூரில் உரிய விவரங்களை சொல்லாமல் வீட்டை பூட்டி விட்டு போனால் பொறுப்பேற்க முடியாது என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்லும்போது சில சமயம் திருட்டு சம்பவங்களும் நடந்து விடுவது தொடர்ந்து வருகிறது. உயரிய பொருட்களை வீட்டில் வைத்திருப்போர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதுகுறித்த விவரங்களை தெரிவித்து வீட்டிற்கு பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் அதன் சாவியை யாரிடம் கொடுத்திருக்கிறீர்கள் மற்றும் வீட்டுக்கு எத்தனை வாசல் என்ற விபரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், அப்படி தெரிவிக்காதவர்கள் வீட்டில் திருட்டு போனால் அதற்கு வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் இதுகுறித்து பேசுகையில் வீட்டை பூட்டி வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தெரிவிக்கும் வழக்கம் அதிகமாக இல்லை என்றும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.