முரசொலி நில விவகாரத்தில் அது வாடகை கட்டிடம் என வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவுக்கு சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார்.
முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவில் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனால் திமுக முரசொலி கட்டிடம் குறித்த ஆதாரங்களை சமர்பிக்க வேண்டிய தேவை எழுந்தது. முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் தனியாரிடமிருந்து முறைப்படி பெறப்பட்டது என திமுகவினரும் தங்கள் பங்குக்கு சில விவரங்களை காட்டி வந்தனர்.
இந்நிலையில் முரசொலி அலுவலகமே வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பூதாகரமாக கிளம்பியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ் ” முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ”அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது!” என்று கிண்டலாக கூறியுள்ளார்.