தமிழகத்தில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் முன்னதாக கருணாநிதி ஆட்சியின்போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும் என அதற்கு எதிர்ப்புகளும் இருந்தன.
தொடர்ந்து அதிமுக ஆட்சி அமைத்த நிலையில் தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரியில் பொங்கல் கொண்டாடுவதற்கான பொங்கல் பை தொகுப்பு பையில் பொங்கல் வாழ்த்துகளுடன், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்ற திமுக முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து சட்டசபையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.