Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதா? போராட்டம் அறிவித்த பாமக தலைவர் அன்புமணி..!

Advertiesment
விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதா? போராட்டம் அறிவித்த பாமக தலைவர் அன்புமணி..!

Siva

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (13:05 IST)
திட்டக்குடி அரசு பள்ளி விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதா? என கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ்  பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில்  மாணவர்களுக்கான விடுதி கட்ட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது.  விளையாட்டுத் திடலின் பயன்பாட்டை அழித்து விட்டு விடுதி கட்டக் கூடாது என்று அப்பகுதியில் உள்ள முன்னாள் மாணவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் நான் திட்டக்குடி சென்ற போது முன்னாள் மாணவர்கள் என்னை சந்தித்தும் கோரிக்கை விடுத்தனர்.  மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவது கண்டிக்கத்தக்கது.
 
திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ள்ளியின் விளையாட்டுத் திடலை அந்தப் பள்ளியின் மாணவர்கள் மட்டுமின்றி,  அப்பகுதியில்  உள்ள பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களும் விளையாடுவதற்காக பயன்படுத்தி வந்தனர்.  நகர மக்களும் நடைபயிற்சிக்காக  விளையாட்டுத் திடலை பயன்படுத்தி வந்தனர்.  விளையாட்டுப் பயன்பாட்டுக்காக உள்ள திடலை வேறு பயன்பாட்டுக்காக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுத் திடல் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தனியார் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் இல்லாத சூழலில் அவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  அவ்வாறு இருக்கும் போது அரசு பள்ளியில் பயன்பாட்டில் இருக்கும் விளையாட்டுத் திடலை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது விதிகளுக்கு எதிரானது ஆகும்.  திட்டக்குடி நகரில் குறிப்பிடும்படியாக விளையாட்டுத் திடல்கள் இல்லாத நிலையில், இந்தத் திடலும் மூடப்பட்டால் மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியும், மக்களின் நடைபயிற்சியும் பாதிக்கப்படும்.
 
மாணவர்களுக்கான விடுதி  தி.இளமங்கலத்தில் செயல்பட்டு வந்தது. அங்கு விடுதியை நடத்துவதில் சிக்கல் இருந்தால் திட்டக்குடியில் வேறு இடத்தில் விடுதியை கட்டலாம். பள்ளிக்கு அருகிலேயே அரசுக்கு சொந்தமான இடம் இருந்தால் கூட அங்கு விடுதியை கட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. விடுதி கட்ட வேறு இடங்கள் இருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் விட்டு விட்டு  பள்ளியின் விளையாட்டுத் திடலில் தான் விடுதி கட்டுவோம் என அரசு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
 
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதை கைவிட வேண்டும்; விளையாட்டுத் திடல் தொடர்ந்து அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 7-ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு திட்டக்குடி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பா.ம.க. சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் இரா கோவிந்தசாமி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி துணை முதல்வரா.? முதல்வர் ஸ்டாலின் நச் பதில்.!