பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது பெற்ற பிரபல திரைக்கலைஞர் கமல்ஹாசனுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுக்கு பினராயி விஜயன் அனுப்பிய கடிதத்தில், ‘பன்முகத் தன்மையுடன் இந்திய சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதற்காக பிரான்ஸ் அரசின் லீஜியன் ஆஃப் ஹானர் விருது தங்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்திய சினிமாவின் பெருமைகளை எல்லைகள் இல்லாத தொடுவானிற்கு உயர்த்திட இவ்விருது உதவியுள்ளது.
தங்களுக்குக் கிடைத்த இந்த பெருமைமிகு விருதைதங்களின் ரசிகர்களுக்கும், தங்களின் நலன் விரும்பிகளுக்கும் அர்ப்பணித்திருப்பது என்பது தங்களின் பெருந்தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.
கேரள மக்கள் அனைவரின் சார்பாக நான் உங்களை உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது அண்டை மாநில முதல்வர்கூட நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள நிலையில், தமிழக அரசு சார்பாக இதுவரையிலும் ஒரு பாராட்டு செய்தியோ, வாழ்த்துச் செய்தியோ வராதது தமிழக திரைக்கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.