விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டணைக் கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு விடுப்பு வழங்கக் கோரி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த உஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனக்கு அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டுவதற்காக கணவரின் உதவி தேவைப்படுவதால், அவருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கக் கோரி கடந்த ஜூன் மாதம் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க 28 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், 15 நாட்களுக்குள்ளாகவே ஏன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா, அவசர சூழல் காரணமாகவே மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கணவருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். மேலும், தண்டனைக் கைதிகள் விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் மனுவை உரிய கால அவகாசத்துக்குள் பரிசீலிக்க வேண்டுமென சிறைத்துறைக்கு உத்தரவிட்டனர்.
அதேநேரம், உரிய கால அவகாசத்துக்குள் விடுப்பு கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.