Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாதொருபாகன் நூல் பிரச்சனை: எழுதிய நூல்களைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் - பெருமாள் முருகன் உருக்கமான அறிக்கை

Advertiesment
மாதொருபாகன் நூல் பிரச்சனை: எழுதிய நூல்களைத் திரும்ப பெற்றுக் கொள்கிறேன் - பெருமாள் முருகன் உருக்கமான அறிக்கை
, செவ்வாய், 13 ஜனவரி 2015 (19:03 IST)
மாதொருபாகன் நூலில் பிரச்சனைக்குரிய பகுதிகள் இருப்பதாகக் கூறி அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் அனைத்து  நூல்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
 
"எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை"
 
எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.
 
பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.
 
‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சனை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சனை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள் முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:-
 
பெருமாள் முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
 
பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
 
பெருமாள் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான். இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள் முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
 
எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சனையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
 
அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
பெ.முருகன்
 
என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil