கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொதுமக்கள் சார்பில் இதுவரை 108 கோடி நிதி வந்துள்ளதாக முதல்வர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16 ஆம் தேதி தமிழக்த்தில் வீசிய கஜாப் புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த மாவட்ட மக்கள் தங்கள் வீடு, பயிர்கள் மற்றும் கால்நடை என அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து வாடுகின்றனர்.
இதுவரையில் கஜா புயல் சேதம் 6000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு சார்பில் 600 கோடி ரூபாய் மட்டுமே நிவாரனமாக வழங்கப்பட்டுள்ளது. நிவாரனம் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மாறி மாறி காரணம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி தமிழக முதல்வர் கே.பழனிசாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.அதை ஏற்ற பொதுமக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம் வழங்குவதற்காக இதுவரை ரூ.108 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 624 முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர். இந்த விவரத்தை நேற்று முதல்வர் அறிக்கையாக வெளியிட்டார்.