காவிரி டெல்டா பகுதிகளில் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்குமாறு டிடிவி. தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளதாவது:
''கடந்த 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
கனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு அதற்கான உரிய இழப்பீடு தொகையை வழங்குவதோடு, பயிர்க்காப்பீடு செய்திருக்கும் பயிர்களுக்கான இழப்பீட்டையும் விரைந்து பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான இழப்பீடை உடனடியாக வழங்குவதோடு, ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் ''என்று தெரிவித்துள்ளார்.