தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில் 3000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவிலிருந்து காவிரி ஆற்றில் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழக அரசின் அழுத்தம் மற்றும் காவிரி மேலாண்மை வாரிய அறிவுறுத்தலால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல கன்னட நடிகர்களும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக பேசி வருகின்றனர்.
தண்ணீர் திறந்துவிடுவது குறித்து பேசிய கர்நாடக அரசு, காவிரியில் இருந்து இதற்கு மேலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 53 சதவீதம் மழை பற்றாக்குறை நீடிப்பதாகவும், கர்நாடகாவில் 161 தாலுக்காக்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து ஆலோசித்தது. இதில் தமிழ்நாடு தரப்பில் விநாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தது. ஆனால் காவிரி ஒழுங்காற்றுக் குழு விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது.