அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் நடந்து வரும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட தொடங்கினர். அதை தொடர்ந்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் உள்ளிட்டோரையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பதிலில் “என்னை கட்சியிலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நான் கட்சியை விட்டு நீக்கி அறிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து வரும் இந்த மோதலால் அதிமுகவில் குழப்பமும், பரபரப்பு நிலவி வருகிறது.