Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி கட்டுப்பாடுகள்… ஓபிஎஸ் கண்டனம்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (11:07 IST)
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களுக்கான தள்ளுபடியில் பல்வேறு கட்டுபாடுகள் அறிவிக்கப்பட்டு 35 லட்சம் பேர் அதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து முன்னாள் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிகையில் "எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது, "திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. தலைப்புச் செய்தி என்று கூறி இந்த வாக்குறுதியை திமுக தலைவர் வாசித்தார். திமுக-வின் தேர்தல் அறிக்கையிலோ அல்லது திமுக தலைவர் தலைப்புச் செய்தியாக வாசித்தபோதோ எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு மேடையிலும் திமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்களால் இந்த வாக்குறுதி எடுத்துரைக்கப்பட்டது. முதலமைச்சரின் மகன் ஒருபடி மேலே சென்று, "கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி. நாளைக்கே போய் வாங்கிடுங்க. வரப்போவது நம்ம ஆட்சி, நம்முடைய தலைவர் தள்ளுபடி செய்திடுவாரு" என்று கூறினார். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. ஆனால், இன்று என்ன நிலைமை? நகைக் கடன் வாங்கியோரில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு கடனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்து இருக்கிறது. நகைக் கடன் தள்ளுபடி குறித்து அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஏற்கெனவே பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விவரங்களை பகுப்பாய்வு செய்ததில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் நகைக்கடன் பெறத் தகுதி இல்லாதவர்கள்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அப்படியென்றால், வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே கடன் பெறத் தகுதியானவர்கள். இதற்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் 16 லட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பகுப்பாய்வுக்கு பின் அதுவும் இரண்டரை லட்சம் குறைந்துவிட்டது. அதாவது, தேர்தல் வாக்குறுதிப்படி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நகைக்கடன், நிதிநிலை அறிக்கையில் 5,000 ஆயிரம் கோடி ரூபாய் எனக் குறைக்கப்பட்டு, தற்போது அது கிட்டத்தட்ட 4,500 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வந்து நிற்கிறது.

இதைச் சரியாக கணக்கிடும்போது இதற்கானத் தொகை இன்னும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. திமுக அரசின் இந்தச் செயல்பாட்டினை நினைக்கும்போது "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது" என்ற பழமொழிதான் அனைவரின் நினைவிற்கும் வருகிறது. நகைக் கடன் தள்ளுபடிக்கான திமுக அரசின் இந்த அறிவிப்பு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக ஆக்கியுள்ளது. இவர்கள் கடனாளிகளாக ஆக்கப்பட்டதற்கு திமுக தான் காரணம். இந்தச் செயல் நம்பிக்கைத் துரோகத்தின் உச்சகட்டம். வாக்களித்த மக்களை வஞ்சித்த திமுக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவரும், நிர்வாகிகளும் மேடைக்கு மேடை பேசியதையும், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியையும் நம்பி மக்கள் திமுக-விற்கு வாக்களித்தனர். ஆனால், இன்று பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டு இருக்கின்றனர். பகுப்பாய்வு குறித்து ஏன் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை? பகுப்பாய்வு குறித்து ஏன் மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்யவில்லை? நகைக் கடனை வாங்கத் தூண்டும் வகையில் ஏன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது? என்ற கேள்விகள் தற்போது மக்கள் மனங்களில் எழுந்துள்ளன. திமுக அரசின் இந்தச் செயலைப் பார்க்கும் போது "பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம்தான், இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்ற மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நடித்த படத்தின் பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பகுப்பாய்வு செய்ததைப் போல் நாம் பகுப்பாய்வு செய்யாமல் வாக்களித்துவிட்டோமே, பகுப்பாய்வு செய்திருந்தால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காதே, நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கமாட்டோமே என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுபோன்ற பகுப்பாய்வினை மக்கள் மேற்கொண்டால் பகுப்பாய்வு செய்யும் உரிமையை திமுக இழக்கும். அதற்கான காலத்தை மக்கள் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி நகைக்கடனைத் தள்ளுபடி செய்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments