இன்று தமிழகமெங்கும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு தனது சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
செய்யும் தொழிலை தெய்வமாகப் போற்றி அன்னை பராசக்தியின் நல்லருள் வேண்டி, தொழில் வளமும் கல்விச் செல்வமும் பொங்கிப் பெருகிட, தொழிலுக்கு ஆதாராக விளங்கிடும் தொழிற் கருவிகளையும், கல்விக்கு ஆதாரமான புத்தகங்களையும் எழுது பொருள்களையும் இறைபொருளாக கருதி வழிபடும் நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் நாளான "ஆயுதபூஜை" திருநாளையும், தொடங்கும் நற்காரியங்கள் யாவும் வெற்றியே பெற்றிடும் என்ற நம்பிக்கையோடு கலை, கல்வி, தொழில் போன்றவற்றை தொடங்கும் வெற்றித் திருநாளான "விஜயதசமி" திருநாளையும் இன்று இனிதே கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று நிறைந்து வாழ எனது மனமார்ந்த #ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஆயுத பூஜை" மற்றும் "விஜயதசமி" திருநாளை பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் கழகம் சார்பில் உளம் கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.