ஜெ. பிறந்தநாள் அன்று களத்தில் குதிக்கும் ஓபிஎஸ்-தீபா: நீதி கேட்டு சூறாவளி பயணம்!
ஜெ. பிறந்தநாள் அன்று களத்தில் குதிக்கும் ஓபிஎஸ்-தீபா: நீதி கேட்டு சூறாவளி பயணம்!
அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதையடுத்து இன்று ஓபிஎஸ் தரப்பினர் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் முக்கிய முடிவாக மக்களை தேடி நீதி கேட்டு பயணம் செல்ல முடிவு எடுத்துள்ளனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலாவின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது அதிமுக. இதனையடுத்து ஒருவழியாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியே வந்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ் ஆதரவு பெருகியது. இதனையடுத்து ஆரம்பம் முதலே சசிகலாவை எதிர்த்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஓபிஎஸ் உடன் கை கோர்த்தார்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்களின் ஆதரவை சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி வென்றாலும், மக்கள் அதிருப்தியில் தான் உள்ளனர். இதனையடுத்து மக்கள் ஆதரவையும், தொண்டர்கள் ஆதரவையும் பெற்று எடப்பாடி அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்கா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று ஓபிஎஸும், தீபாவும் இணைந்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் துவங்க உள்ள இந்த சுற்றுப்பயணம் தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து நடைபெற உள்ளது.
ஓபிஎஸும், தீபாவும் இணைந்து நீதிகேட்டு பிரச்சாரம் செய்ய உள்ள இந்த பயணத்தில் முதற்கட்டமாக 122 தொகுதிகளில் செற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கும் என கூறப்படுகிறது.