Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும்-சசிகலா

திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும்-சசிகலா
, சனி, 18 நவம்பர் 2023 (12:49 IST)
இன்றைய திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும் என்ற அவல நிலை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது தான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குகிறது. ஸ்ரீ முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்த திருத்தலம். இங்கு ஒவ்வொரு நாளும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும், தற்போது கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள்  நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்றைக்கு நடப்பதையெல்லாம் பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது. அதாவது திருச்செந்தூரில் கடவுளை தரிசிக்க ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும், திருச்செந்தூர் கோயிலில் அதிகாலையில் மேற்கொள்ளப்படும் விஸ்வரூப தரிசன கட்டணம் இது நாள் வரை 100 ரூபாயாக ஆக இருந்தது. ஆனால் தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சுவாமி அபிஷேக தரிசனத்திற்கு முந்தைய கட்டணம் 500 ரூபாயாக இருந்தது. அதனை தற்போது 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமையிலான அரசு அறிவித்துள்ளதால், சாமானியர்கள் கடவுளை தரிசனம் செய்ய வழியின்றி மிகவும் வேதனையில் இருக்கின்றனர்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் வாக்களித்த மக்களிடமிருந்தே பல்வேறு வழிகளில் பணத்தை வசூலிப்பதை ஒவ்வொருநாளும் கண்கூடாக பார்க்கமுடிகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவதாக சொல்லி மக்களிடம் வழிப்பறி செய்வது, அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 5 ரூபாய், 10 ரூபாய் என வசூலிப்பது, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை அடிப்பது, ஏழை, எளியவர்கள் தங்கள் வயிற்று பிழைப்புக்காக சாலை ஓரத்தில் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்பவர்களிடம் மாமூல் வசூலிப்பது என்று  பல்வேறு வழிகளில் மக்களிடமிருந்து சுரண்டபடுவதை ஒவ்வொருநாளும் பத்திரிகை மூலமாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

அதாவது ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு கடைசியில மனுசன கடிச்ச கதையாக இன்றைக்கு திருச்செந்தூர் போன்ற பிரசித்தி பெற்ற கோயிலிலேயே மக்களிடமிருந்து அநியாயமாக வசூல் வேட்டை நடத்துவது வேதனையின் உச்சமாக இருக்கிறது. பொதுவாக கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு 10, 20, 50 ரூபாய் என அதற்குரிய கட்டண ரசீதை பெற்று மக்கள் தரிசனம் செய்வதை பார்த்து இருக்கிறோம். அவ்வாறு செலுத்தப்படும் கட்டணம் அந்தந்த கோவில் பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இன்றோ ஒவ்வொருவரிடமும் 1,000 ரூபாய் வசூலித்து அதனை ஒருவர் மஞ்சப்பையில் போட்டுக்கொள்கிறார். இந்த மஞ்சப்பை யாரிடம் போய் சேரும் என்று தெரியவில்லை. இவ்வாறு மக்களிடமிருந்து யார் வசூலிக்க சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் அரசின் கவனத்திற்கு செல்கிறதா?

இதை கட்டுப்படுத்த ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது என்பது புரியவில்லை? இன்றைய திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும் என்ற அவல நிலை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது தான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம். திமுக தலைமையிலான அரசின் மீதமிருக்கும் ஆட்சிக் காலத்தில் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் அனுபவிக்க போகிறார்களோ?  என்று தெரியவில்லை. எல்லாம் அந்த மஞ்சப்பைக்கே வெளிச்சம்!என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் கால்கள் அகற்றம்: கதறி அழுத பெற்றோர்..!