நாளை முதல் ஜி.எஸ்.டி அறிமுகமாக உள்ளதால், என்ன டிக்கெட் விலை நிர்ணயிப்பது என்பதில் குழப்பம் நீடிப்பதால், தியேட்டரில் நாளைக்கான ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பல வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தை மத்திய அராசு கொண்டு வந்தது. அதன் படி சினிமாவிற்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சினிமா டிக்கெட்டின் விலை உயரும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, இந்த வரியை குறைக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். எனவே, ரூ.100 மற்றும் அதற்கும் குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கன வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.100க்கும் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமுலுக்கு வருகிறது. அதன் படி ரூ.120 விலை உடைய டிக்கெட் இனி 28 சதவீத ஜி.எஸ்.டி வரியை சேர்த்து ரூ.153.60 ஆக உயரும். அநேகமாக அந்த டிக்கெட் இனிமேல் ரூ.150 க்கு விற்கப்படும் எனத் தெரிகிறது. இந்த விலை உயர்வு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி தென்னிந்திய திரைப்பட சங்கங்கள் கோரிக்கை விடுத்தும், தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ரூ.100க்கும் அதிகமான விலை கொண்ட தியேட்டர்களில், ஜிஎஸ்டி படி டிக்கெட்டிற்கு என்ன விலை நிர்ணயிப்பது என்பதில் தியேட்டர் அதிபர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி திரையரங்க அதிபர்கள் கூட்டத்தில் இறுதியான முடிவு எட்டிய பின், டிக்கெட் விலை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.