Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம்- அன்புமணி ராமதாஸ் வேதனை

Advertiesment
Anbumani

Sinoj

, திங்கள், 8 ஜனவரி 2024 (12:35 IST)
'8 வயது குழந்தையின் உயிரை வாங்கிய ஆன்லைன் சூதாட்டம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால், தமது 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார்.

காவல்துறை விரைந்து செயல்பட்டதால் தற்கொலை முயற்சியிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தந்தை குழந்தையை கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. விமானப்படையில் பணியாற்றி வரும் சைதன்யா ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், சொந்த ஊரில் இருந்த சொத்துகள் அனைத்தையும் விற்பனை செய்தும் கூட கடனை அடைக்க முடியவில்லை. அவரது மாத ஊதியத்தை விட ஒவ்வொரு மாதமும் கடனுக்காக செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. கடனை திரும்ப அடைக்க வழியே இல்லாத சூழலில் மகனைக் கொன்று தாமும் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் எத்தகைய கேடுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.

கடந்த காலங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் அதிக அளவில் நடந்ததால் தான் அவற்றை தடுக்கும் நோக்குடன் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. பா.ம.க. முயற்சியால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இரு முறை நிறைவேற்றப்பட்டும் கூட, திறமை சார்ந்த விளையாட்டுகளான ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவற்றை அந்த சட்டங்களின் மூலம் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தன் காரணமாக ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தழைத்து அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கத் தொடங்கியுள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு ஆகும். 3 நாட்களுக்கு முன் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் இத்தகைய உயிரிழப்புகளை தடுக்க முடியாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்; ஆனால், உணர்ந்ததாக தெரியவில்லை.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தான் ஒரே தீர்வு ஆகும். உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருக்கும் போதிலும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. கடந்த சில நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் இரு உயிர்கள் பலியாகிவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடு புகுந்து பிளஸ் 1 மாணவி பலாத்காரம்! ஆசிரியர் கைது.!! மேலும் பல பெண்களை சீரழித்ததாக அதிர்ச்சி தகவல்.!!!