உசிலம்பட்டியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உட்பட 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ். பட்டதாரியான இவரிடமும், இவரது தாயார் ஜான்சிராணியிடமும், பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதே பகுதியை சேர்ந்த பாஜக மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவர் சிவமதன், அவரது மனைவி அபிராமி, அவரது மாமனார் செல்வம் ஆகியோர் சுமார் 7,50,000 ரூபாய் பெற்று அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
பணத்தை திருப்பி கேட்ட தன்னையும், தனது தாயையும் தாக்கி மோசடி செய்தாக ஆகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவமதன், அபிராமி, செல்வம் ஆகியோர் மீது கடந்த 2022ஆம் ஆண்டு உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், மோசடியில் ஈடுபட்டது மற்றும் பணம் கேட்டு வந்தவர்களை தாக்கிய குற்றத்திற்காக பாஜக பிரமுகர் சிவமதன், அவரது மனைவி அபிராமி, மற்றும் அவரது மாமனார் செல்வம் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், மூன்று பேருக்கும் தலா 2,50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.