சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டப்படுவதை ஏற்றுக்கொண்டால் அனைத்து இந்து கோவில்களையும் இடித்துவிட்டு பெளத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறினார். திருமாவளவனின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் திருமாவளவன் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கடைப்பிடித்து அன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. நானும் பங்குக் கொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வி.சிகவின் தலைவர் திருமாவளவன் அவர்கள் இந்துக் கோவில்களை இடிக்க வேண்டும் என்று எவ்வகையிலும் குறிப்பிடவில்லை. தர்க்க ரீதியாக ஒரு வழிப்பாட்டுத் தலம் முன்பு வேறு மதத்தின் வழிப்பாட்டுதலமாக இருந்தது என்று எடுத்துக் கொண்டால் நாட்டில் எந்தவொரு வழிப்பாட்டுத் தலமும் மிஞ்சாது என்று வரலாற்று உண்மைகளைத் தான் திருமாவளவன் எடுத்துரைத்தார்' என்று கூறியுள்ளார்.