ஈரோடு மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்துள்ளது. இது ஒரு அபூர்வ நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ராஜு, சுமதி ஆகியோருக்கு இரண்டு குழந்தை உள்ளது. இவர்களின் இரண்டாவது குழந்தை நிஷாவுக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்த குழந்தைக்கு பிறந்தது முதலே வயிறு பெரிதாக இருந்துள்ளது.
நாளடைவில் அந்த குழந்தையின் வயிறு பெரிதாக வளர்ந்து கொண்டே சென்றுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தந்தை ராஜு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சையாக சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில், குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்து இருப்பது தெரியவந்தது. அந்த கரு முன்றரை கிலோ எடை வரை வளர்ந்துள்ளதால் மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து குழந்தையை காப்பாற்றினர். பின்னர் இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
உலகில் பத்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இதுபோன்ற அபூர்வ நிகழ்வு நடப்பதுண்டு.
குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு, கர்ப்பிணி பெண்களுக்கு இருப்பது போலவே பனிக்குட நீரோடு வளர்ந்து குழந்தையின் சிறுநீரகம், இரைப்பை, மண்ணீரல் உள்ளிட்ட பாகங்களை தள்ளியபடி வளர்ந்து இருந்தது.
அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். தாயின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உருவாகி, அது ஒன்றோடு இன்று உள்வாங்கி கொள்வது அல்லது குழந்தையின் “ஸ்டெம் செல்களில்” ஏற்படும் மாறுபாடு போன்றவற்றால் இது போல நடப்பதுண்டு, என்று தெரிவித்தார்.
மேலும் இந்த குழந்தை இனிமேல் மற்ற குழந்தைகளை போல நன்றாக வளரும் என்று தெரிவித்தார்.