முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நடத்திய பால்குட ஊர்வலத்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் 2000 பேர் பங்கேற்கும் பால்குட ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, கட்சியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் தொண்டர்கள் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோயில் முன்பு குவிந்தனர்.
இந்த ஊர்வலத்திற்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ மனோன்மணியும் அதில் கலந்து கொண்டார். கட்சியினர் பால்குடத்தை சுமந்தபடி கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அதில், கொண்டலாம்பட்டியை சேர்ந்த இலட்சமனன் (60) என்பவரும் கலந்து கொண்டவர். உத்தமசோழபுரம் கோயில் அருகில் வந்தபோது, உணவருந்தாமல் இருந்ததாலும், நீண்டதூரம் வெயிலில் நடந்து வந்ததாலும் அந்த தொண்டர் மயக்கமடைந்தார்.
பின்னர், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் செயலற்று கிடந்ததை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலைக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து மரணம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.