Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்… கர்நாடக அரசுக்கு ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!

Advertiesment
ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்… கர்நாடக அரசுக்கு ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!
, திங்கள், 24 ஜனவரி 2022 (09:48 IST)
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. முதன்முதலில் 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1994-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 1994-ம் ஆண்டு 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக இரண்டாவதாக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருபுகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவினை 2005-ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். அதன் அடிப்படையில் நிதி உதவி பெறப்பட்டு 2008-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்பொழுதும் இந்தத் திட்டத்துக்கு கர்நாடகா அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைக் கண்டித்து 2008-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்கள். தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பதை கர்நாடகா அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த எதிர்ப்புக்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நதிநீர் பங்கீட்டில், தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம். சட்டப்படி தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரைக் கூட திறந்துவிட மறுப்பதையும் கர்நாடகாவில் உள்ள அணைகள் முழுதும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்துவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் ஓகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் குறைய தொடங்கியுள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!