Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது - சீமான் எச்சரிக்கை!

Advertiesment
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது - சீமான் எச்சரிக்கை!
, வெள்ளி, 15 ஆகஸ்ட் 2014 (12:36 IST)
இலங்கையில் நடக்கவிருக்கும் இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
 
அதில், சீமான் கூறியிருப்பதாவது:- 
 
இனவெறிக் கொடூரம் நிகழ்த்திய அரக்க அரசாக உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிற சிங்கள அரசு எதிர்வருகிற 18,19,20 ஆகிய தேதிகளில் இராணுவக் கருத்தரங்கை நடத்தவிருக்கிறது. அறுவெறுக்கத்தக்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியத் தலைவர்களுக்கும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் சிங்கள அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. 
 
60 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்களின் குரல்வளையை நெரித்தும் தமிழக மீனவர்களை வேட்டையாடியும் தன் அரக்கத்தனத்தைக் காட்டிவரும் சிங்கள ராணுவம் ஈழப் போர் நிகழ்ந்தபோது நடத்திய மனிதாபிமானமற்ற இனவெறிக் கொடூரத்தை எவராலும் மறக்க முடியாது.
 
லட்சக்கணக்கான தமிழர்கள் மீது கொடூரமான இராணுவத் தாக்குதலை நடத்தி பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராது மண்ணோடு மண்ணாக்கி, பெண்கள் மீது மிருகங்களாகப் பாய்ந்து நாசமாக்கி ரசித்த சிங்கள அரக்கர்கள் இனவெறிக் கொடூரர்களாக உலகின் பார்வையில் தலைகுனிந்து நிற்கிறார்கள். அவர்கள் தண்டிக்கப்படவும் ஒவ்வொரு தமிழனும் அடைந்த துயருக்குப் பதில் தேடவும் உலகின் மனசாட்சி மிகுந்த சக்திகள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், போர்க்கொடூரங்களை மறைக்கும் விதமாகவும் தங்களுக்குத் தாங்களே புகழ் பாடும் விதமாகவும் இராணுவக் கருத்தரங்கை நடத்தி முழுப்பூசணியையும் சோற்றில் மறைக்கப் பார்க்கிறது சிங்கள அரசு.
 
840-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொலை செய்தும் அனுதினமும் அவர்களின் மீது மிருகவெறித் தாக்குதல் நடத்தியும் வரும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்தை ஒருபோதும் நாம் மன்னிக்க முடியாது. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிங்களச் சிறைகளில் தவிக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதாக ராஜபக்சே அறிவித்திருக்கிறார். எதற்காக தமிழர்களை அவர் கைது செய்தார் எனக் கேட்பதற்கு இங்கே யாருக்கும் துணிவில்லையா? நினைத்தால் கைது செய்வதற்கும் நினைத்தால் வெளியே விடுவதற்கும் பெயர் ஜனநாயகமா? இந்தியாவை நட்பு நாடாக ராஜபக்சே நினைத்திருந்தால் எத்தகைய துணிவில் தமிழக மீனவர்களை நாசம் செய்யும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வார்? தமிழக மீனவர்களை வேட்டையாடுவதற்காகவே கப்பல் படையை காவு வெறியோடு கடலில் நிறுத்தி வைத்து நித்தமும் ரத்தம் பார்த்து ரசித்திருப்பார்.

இத்தகைய கொடூரங்களும் கொடுமைகளும் போதாது என நினைத்து இந்தியப் பிரதமரையும் எட்டு கோடி தமிழ் மக்களின் முதல்வராக விளங்கும் தமிழக முதலமைச்சரையும் கேலிச்சித்திரமாக்கி தங்களின் இராணுவ இணையதளத்தில் வெளியிட்டிருப்பார்கள். மாபலம் பொருந்திய இந்திய தேசத்தையே இழிவுபடுத்தும் ஈனச் செயல் அல்லவா இது? வெறுமனே மன்னிப்பு கேட்பதால் இந்த மாபெரும் கேவலம் மறக்கப்பட்டு விடுமா? இந்நிலையில் சிங்கள அரசு நடத்தும் இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரேனும் பங்கேற்றால் இந்தக் கேவலச் சித்தரிப்பை ஏற்பது போலாகிவிடாதா? தெற்காசிய பிராந்தியத்தின் வல்லரசாக இருக்கும் இந்தியப் பேரரசு இந்தக் கேலிச்சித்திர அசிங்கத்தையும் இலங்கை அரசு மீது இனவெறி நடவடிக்கைகள் தொடங்கியிருக்கும் நிகழ்வையும் சொல்லி சிங்கள இராணுவக் கருத்தரங்கில் கலந்துகொள்ளக் கூடாது.
 
ஒட்டுமொத்த போர்க் கொடூரங்களை மறைக்க புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகளைத் தோண்டியெடுத்து அழிக்கிற கொடுமைகளில் இறங்கியிருக்கும் சிங்கள இராணுவம் உலக அரங்கில் தன் மீதான கறையைச் சரிசெய்யும் முயற்சியாகவே இராணுவக் கருத்தரங்கை நடத்துகிறது. நினைக்கவே நெஞ்சு நடுங்க வைக்கும் போர்க் கொடூரங்களை நிகழ்த்திய சிங்கள இராணுவம் இந்தக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவரையேனும் கலந்துகொள்ள வைத்து தன் மீதான பழிபாவங்களை உலகின் பார்வையிலிருந்து மறைத்துவிடப் பார்க்கிறது.
 
இந்தச் சதிச் செயலில் இந்தியத் தலைவர்களோ இந்திய ராணுவ அதிகாரிகளோ எக்காரணம் கொண்டும் சிக்கிக் கொள்ளக்கூடாது. இதையும் மீறி எவரேனும் அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டால் அது இந்த தேசத்தையும் ஒவ்வொரு தமிழர்களின் உணர்வுகளையும் மிதிக்கும் செயலாகவே இருக்கும்.
 
சிங்கள அரசின் இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 17-ம் தேதி சென்னை லயோலா கல்லூரி அருகே இருக்கும் இலங்கை தூதரகத்தை முற்றுக்கையிடும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்த இருக்கிறது. இந்திய அரசுக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளைத் தெரிவிக்கும் விதமாக இந்தப் போராட்டத்தில் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil