விஜய்யை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும், எனவே அவர் தனித்து புலம்புகிறார் என்றும், விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், இரண்டாவது இடம் யாருக்கு என்பதில் தான் மற்ற அணிகளுக்கு இடையே உள்ள போட்டி என்றும் அவர் கூறினார்.
அழைப்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் தனித்து நின்று விஜய் புலம்புவதாகவும், திமுகவின் வெற்றியை விஜய்யின் பேச்சு எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், பாதிக்கிற சூழல் தமிழகத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய நிலையில், துணைவேந்தர்கள் மாநாட்டினை கூட்டவும் அவருக்கு அதிகாரம் இல்லை என்று புரிந்து கொண்ட துணைவேந்தர்கள் அவருடைய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.