தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக அதிக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 22-ல் உருவாகும் இந்த சின்னம், மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் மேலும் வலுப்பெறக்கூடும். இதன் தாக்கத்தால், நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் காவேரி படுகை மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்க்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15-ல் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவான முந்தைய தாழ்வுப் பகுதியின் காரணமாக, இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.