குடிசை வீட்டில் இருந்த பரிபூரணம் அக்காவுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டதாக துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியம், சொரக்குடியைச் சேர்ந்த அக்கா பரிபூரணம் அவர்கள், அவரது குடும்பத்தோடு பல்லாண்டுகளாக குடிசை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்திய போது, அதற்கு விண்ணப்பித்தார்.
அதன்படி, வீடு கட்டுவதற்கான ஆணையும், நிதியும் வழங்கப்பட்ட நிலையில், புதிய வீட்டினை அவர் கட்டி முடித்துள்ளார். அதற்கான சாவியை அக்கா பரிபூரணம் அவர்கள் கட்டியுள்ள புதிய வீட்டிற்கே நேரில் சென்று இன்று வழங்கினோம்.
குறிப்பாக, அருகாமையில் அவர்கள் ஏற்கனவே வசித்து வந்த குடிசை வீட்டுக்குச் சென்று அதனை பார்வையிட்டோம். பின் அங்கிருந்து கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டினை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.
மேலும், அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் குவளைக்கால், சொரக்குடி, பனங்குடி, மூங்கில்குடி கிராமங்களைச் சேர்ந்த 10 பேருக்கு வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கான ஆணைகளை வழங்கினோம்.
எளிய மக்களின் வாழ்வில் ஏற்றமிகு மாற்றத்தை உண்டாக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை, பரிபூரணம் அக்கா மட்டுமன்றி சொரக்குடி கிராமத்தார்களும் போற்றிப் பாராட்டியதில் உள்ளம் மகிழ்ந்தோம்.