தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலின்போது தமிழகத்தில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்ட நிலையில் 4 கோடி பற்றி மட்டும் விசாரிக்கின்றனர் என்றும் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கைதான 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள் தான், ஆனால் காவல்துறை மிரட்டி வாக்குமூலம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்த நயினார் நாகேந்திரன், மே 2 ஆம் தேதி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆவேன் என்றும் கூறினார்.
தாம்பரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,
முன்னதாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பேர் ஏற முயன்றபோது அவர்கள் பையில் கட்டுக்கட்டாக ஏராளமான பணத்தை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்துடன் பிடிப்பட்டவர்கள் புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வரும் பாஜக உறுப்பினர் சதீஷ் அவரின் சகோதரர் நவின் மற்றும் லாரி ஓட்டுனர் பெருமாள் என தெரிய வந்தது.