Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”மோடி நடிப்பை விட்டால் நல்லது”: கருணாநிதி நேரடி அட்டாக்

”மோடி நடிப்பை விட்டால் நல்லது”: கருணாநிதி நேரடி அட்டாக்
, திங்கள், 17 அக்டோபர் 2016 (15:59 IST)
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளரு வேடம் பொழுதொரு நடிப்பு என்ற கபட நாடகமாடும் செயல்களை ஊக்குவிப்பதைத் தவிர்த்து  நாட்டு மக்கள் பிரச்சினைகளில் நாள்தோறும் கவனம் செலுத்துவது நல்லது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக 2017-ல் நடைபெற விருக்கின்ற சட்டப் பேரவைத் தேர்தலை மனதிலே கொண்டு, எந்த உத்தியையாவது கடைப்பிடித்து வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
 
தமிழக விவசாயிகளுக்கு முறைப்படி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நியாயமாகக் கொடுக்க வேண்டிய தண்ணீரைத் தர மறுத்து வரும்  கர்நாடக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து அந்த அரசை நல்வழிப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த மாநிலத்தில் வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடத் திடீரென மறுத்து தமிழகத்திற்கு எதிராக காயை நகர்த்தி வருகிறது.
 
அது போலவே வரவிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தோடு, பாஜக, அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கும் என்று தெரிவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் ராம் லீலா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டதில் இருந்து, ராமர் கோயில் விவகாரம் மீண்டும் தலை தூக்கும் என்று தெரிகிறது.
 
அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராமரின் வில் அம்பு, அனுமனின் கதாயுதம், மற்றும் விஷ்ணுவின் சின்னமான சுதர்சனச் சக்கரமும் நினைவுப் பரிசுகளாக அளிக்கப்பட்டுள்ளன.  
 
மொத்தத்தில் “இந்து சாம்ராஜ்யம்” என்ற கற்பனையில் அனைத்தும் அன்று நடந்தேறின. இவையெல்லாம் உத்தரப் பிரதேசத் தேர்தலை  மனதிலே வைத்து, பிரதமர் நடத்திய அரசியல் தேர்தல் பிரச்சாரம் என்றே கருதப்படுகிறது. 
 
லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி ராம சரிதத்தை வெளிப்படையாகப் பிரகடனம் செய்ததின் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம்  அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 ஏக்கர் நிலமும் கண்டறியப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் வட்டாரங்கள் இதுபற்றி தெரிவிக்கும் போது, “அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலே  ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், மத ரீதியாக மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அங்கே இந்துக்களின் வாக்குகளைப் பாஜகவுக்கு ஆதரவாகப் பெறுவதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.
 
மத்திய அரசு, குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்படிப்பட்ட நாளரு வேடம் பொழுதொரு நடிப்பு என்ற கபட நாடகமாடும் செயல்களை ஊக்குவிப்பதைத் தவிர்த்து நாட்டு மக்கள் பிரச்சினைகளில் நாள்தோறும் கவனம் செலுத்துவது நல்லது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிசிடிவி கேமராவில் பதிவான பேய் ; வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகவில்லை (வீடியோ)