பெரியாருக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இன்றைய தேதி பிறந்தநாள் என்பதால், இருவர் குறித்தும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள் அவர்களது அபிமானிகள். இதில் அதிகம் யார் ட்ரெண்ட் செய்வது என்ற மோதல் இரு தரப்பினரிடையே வலுப்பெற்றுள்ளதாக தெரிகிறது.
1879ம் ஆண்டு செப்டம்பர் 17ல் பிறந்தவர் ஈ.வெ.ராமசாமி. அவரது 141வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதே செப்டம்பர் 17ல் 1950ல் பிறந்தவர் தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இவரது பிறந்தநாளும் தேசிய அளவில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாட்டு தலைவர்களும் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
என்னதான் ஒரே தேதியில் பிறந்திருந்தாலும் இரண்டு தலைவர்களின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. தன் காலம் முழுவதும் இந்து மதத்தையும், கடவுளர்களையும், சாதிய வேறுபாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் பெரியார். இந்து மதம் என்பது இந்தியாவின் வாழ்வியல் என்று பேசியவர் பிரதமர் நரேந்திர மோடி. பொதுவாகவே பெரியாரின் கொள்கைகளை மையமாக கொண்ட திராவிட கட்சியினருக்கும், இந்து மத தர்மத்தை தூக்கி பிடிக்கும் பாஜகவினருக்குமிடையே கடும் வாக்குவாதங்கள் எழுவதுண்டு. இந்நிலையில் இருவேறு தலைவர்களின் பிறந்தநாள் ஒரேநாளில் வந்தால் சொல்லவும் வேண்டுமா!
பெரியாரின் பிறந்தநாளை #FatherOfTamilNation #HBDPERIYAR141 போன்ற ஹேஷ்டேகுகள் மூலம் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை அவரது தொண்டர்கள் #HappyBdayPMModi என்ற ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருதரப்பினருக்குமிடையே யாருடைய ஹேஷ்டேக் முதலிடத்தை பிடிக்கிறது என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் இரு பக்கமும் தொடர்ந்து அவர்களுடைய தலைவர்கள் குறித்த ஹேஷ்டேகுகள் வேகமாக ட்ரெண்டாக்கப்படு வருகின்றன.