ஜனநாயகத்தின் சின்னமாகவே அதிமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாறிவிட்டார் என, அதிமுக பிரச்சாரப் பேச்சாளார் நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற கட்சியின் பெயர் என இரண்டையுமே ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் அணி இருவருமே பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி நாஞ்சில் சம்பத் தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையம் நேற்று இழைத்த தவறைப்போல் இதுவரை எந்நாளும் செய்ததில்லை. இது ஜனநாயகத்தின் மீது நடந்த பகிரங்க தாக்குதல். ஜனநாயகத்தின் மீது நடந்த அத்துமீறல். ஜனநாயகத்தின் மீது நடந்த ஆக்கிரமிப்பு.
மக்களாட்சி தத்துவத்தின் மீது நடந்து இருக்கிற கொரில்லாத் தாக்குதல், இந்த பச்சைப் படுகொலைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பச்சைக் குழந்தைக்கு கூட தெரியும்.
ஒரு துரோகி அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார். இன்னொரு துரோகி மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார். இன்னொரு துரோகி எங்கள் வெற்றிக்கு முதல்படி என்கிறார். துரோகத்துக்கு கிடைத்து இருக்கிற விளம்பரமும் வெளிச்சமும் இனி கிடைக்காது. சரித்திரம் இவர்களை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசும். இதை அநீதியாகப் பார்க்கவில்லை, இதை அனுபவமாக பார்க்கிறேன் என்று துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சொன்னதைக் கேட்டு சொர்க்கமே சொக்கிவிட்டது.
அவருடைய நாகரீக அரசியலை நாளை இந்த நாடே முழுமையாக அங்கீகரிக்கும். துரோகத்தின் ஆரக்கால்கள் வெட்டி வீழ்த்தப்படும். ஜனநாயகத்தின் சின்னமாகவே டிடிவி தினகரன் அவர்கள் மாறிவிட்டார்கள். ஆகவே ஏற்பாடுபட்டாவது டிடிவி தினகரன் அவர்களை வெற்றி பெற வைப்போம், எல்லாத் திசைகளும் அவருடைய திருப்பெயரை திரும்பத்திரும்ப உச்சரிக்கும் நேரம் வந்து விட்டது. தமிழகம் அம்மாவிற்கு பிறகு ஒரு ஆளுமை உள்ள தலைவனை இப்போது அடையாளம் காட்டியிருக்கிறது. அவர் பின்னால் அணிவகுப்போம்! பணி முடிப்போம்!