ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காலில் வந்து விழ வேண்டும் என நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ளது. அதேபோல், தினகரனை நீக்கியது போல், சசிகலாவை நீக்குவது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தினகரன் ஆதரவு நாஞ்சில் சம்பத் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ கட்சியை காட்டிக் கொடுத்து இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர் செல்வம். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்தவர் அவர். தினகரன் மற்றும் சசிகலாவை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
அப்போது, அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர் “அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவந்தால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்ன முடிவெடுப்பார்கள்?’ என கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் “ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் எடப்பாடி தினகரன் காலில் வந்து விழ வேண்டும்” எனக் கூறினார்.