எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தும் கமலை கடுமையாக விமர்சித்துள்ளது அதிமுகவின் நாளேடான நமது அம்மா.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சமீபத்தில் தன்னை எம்.ஜி.ஆரின் நீட்சி என கூறினார். இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கமலை கடுமையாக விமர்சித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ். அதில் கூறப்பட்டிருந்ததாவது...
எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் நான் என்கிறார் கமல், எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன் என்கிறார் ரஜினி. ஏற்கனவே பச்சை எம்.ஜி.ஆர், கிளிப்பச்சஒ எம்.ஜி.ஆர் என்று அரை டஜனுக்கும் மேலாக ஆட்கள் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள், புரட்சித்தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுவர்கள் வேண்டுமானால் அதிமுகவில் வந்த அடிப்படை உறுப்பினர்களாக சேர்ந்துக்கொள்ளலாம்.
எல்லோரும் மக்கள் திலகத்தின் ஆட்சியை தருகிறோம் என சொல்கிறார்களே தவிர ஒருவர் கூட கருணாநிதி ஆட்சி தருகிறோம் என்று பேச்சுக்கு கூட சொல்லவில்லை. அதிலும் குறிப்பாக பெண் வேஷம் போட்டுக்கொண்டு கருணாநிதியிடம் சென்று பாரட்டு பெறும் அளவுக்கு கோபாலபுரத்து கூர்காவாக தன்னை காட்டிக்கொண்ட கமலஹாசனும் கட்சி ஆரம்பித்து கருணாநிதியின் ஆட்சியை தருவேன் என்று சொல்லாமல் அவ்வலை சண்முகம் சாலை தலைவனின் புகழ் உறிஞ்சி பிழைக்கலாம் என மேற்படி அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு அல்லவா?
எப்படியோ அடுத்த கட்சித்தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும் அண்டை வீட்டுக்காரின் பெயரை அப்பாவுக்கு பதிலாக போட்டுக்கொள்வதும் அனேகமாக ஒன்றுதான் என குறிப்பிட்டுள்ளார்.