நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இன்று போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய பயணத்திற்கு 7 பேர் மட்டுமே முன்பதிவு செய்ததால் ரத்து என்றும்,இனி திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது என்பதும் முதல் கப்பல் நேற்று காலை 8.15 மணியளவில் 50 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை நோக்கி கப்பல் புறப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
நேற்று 75 சதவிகித கட்டண சலுகை அளிக்கப்பட்டு இருந்ததால் நாகை துறைமுகத்தில் இருந்து 50 பயணிகள் இலங்கை காங்கேசன் துறைக்கு பயணம் செய்தனர். அதன்பிறகு காங்கேசன் துறையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு 29 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் நாகை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நிலையில், நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கப்பலில் பயணம் செய்ய வெறும் 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்து இருந்ததால் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.