Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் விலகல்.. 15 ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்..!

Advertiesment
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் விலகல்.. 15 ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்..!

Mahendran

, புதன், 19 பிப்ரவரி 2025 (14:56 IST)
15 ஆண்டு காலம் நாம் தமிழர் கட்சியில் இருந்த அக்கட்சியில்  மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
33 ஆண்டு காலமாக தமிழ்த் தேசிய அரசியலுக்கான பயணத்தில் இருந்தபோதும், கட்சித் தொடங்கிய நாட்களிலிருந்து, 15 ஆண்டுகளாக தற்போது வரை, கட்சிக்கான களங்களில், மக்களுக்கான தளங்களில், இணைந்து பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன்!சமீப காலமாக உங்கள் பேச்சும் செயலும் நமது தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றது. எதைச் சொல்லுவது?மதவாத அரசியலை எதிர்ப்பதாக கூறுகின்ற தாங்கள், பாஜக மனித குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜாவை பேரறிஞர் என்று சொல்வதையா!? 
 
தமிழிசை, சீமான் எங்கள் தீம் பாட்னர்\" என்று கூறியதை நீங்கள் மறுக்காததையா!? திருமாவளவனை அண்ணன் என்று கூறிக்கொண்டே, நாம் தமிழர் கட்சி மேடையில் மாற்று இயக்கத்தினர் மேடை நாகரிகம் இன்றி விமர்சிக்கும்போதும் கேலி பேசும் போதும் தாங்கள் கைத்தட்டி சிரித்து மகிழ்வதையா? 
 
நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்குகிறபோது தம்பியென்று சொன்னதையும், அவரே என்னை எதிர்த்தாலும் நான் அவரை எதிர்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு, நடுரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்துவிடுவாய் என்று பேசியதையா? தம்பி அப்துல் ரவூப் நினைவு நாளில் என்னை யாராவது சங்கி என்றால் செருப்பால அடிப்பேன் என்று செருப்பை காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த பிறகு, 'சங்கி" என்றால் "சகத் தோழன்" என்று சொல்வதையா? 
 
இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது?.மாற்றுக் கட்சியில் இருப்பவர்களைத்தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கட்சியில் உள்ளவர்களையே பேசியதை இன்றளவிலும் என்னால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி இன்னும் எத்தனையோ இருக்கின்றன. 
இந்தச் சூழலில் கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த தாங்கள், தமிழ் தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கி பயணப்படும் பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது. அதே வேளையில் மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படி பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைக்கொட்டி சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள், தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது, மேற்கண்ட தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது
 
தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவங்களையும், கட்சியின் கொள்கைகளையும், கட்சியில் உள்ள அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி நீங்கள் சொல்வதே கொள்கை, நீங்கள் பேசுவதே தத்துவம் என்றும். பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து, கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள்.
 
எனது இத்தனை ஆண்டு கால தமிழ்த் தேசிய அனுபவமும் கடந்து வந்த பாதைகளும், அனைத்து மக்களுக்கான அரசியலை நோக்கி உங்கள் தலைமை ஏற்றுக் கொண்டு இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உணர வைத்திருக்கிறது. 
 
மண்ணுக்கான, மக்களுக்கான, மக்களாட்சி தத்துவத்திற்கான அரசியலை நோக்கி, எனது பயணம் தொடரும்.எனவே, தற்போது நாம் தமிழர் கட்சியில் வகித்து வரும், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், விலகுகிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்' இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழரசன் விலகல் குறித்து மதுரையில் சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியபோது, ‘தன்னை முன்னிறுத்திக் கொள்பவர்கள் கட்சியில் இருந்து விலகிச் செல்கிறார்கள். நாதகவில், கட்சிக்காக நான் என செயல்பட வேண்டும்.  சீமானுக்கு பின் யார் தலைவர் எனும் போட்டியால் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். நேர்மையாக கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்