Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செளதியில் தந்தை மர்ம சாவு: உடலை கொண்டு வர மாதக்கணக்கில் போராடும் மகன்

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (23:21 IST)
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்திலிருந்து சாலை துப்புரவு பணி செய்ய ஒப்பந்த அடிப்படையில் செளதி அரேபியாவிற்கு அழகு என்பவர் சென்றிருந்தார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ந்தேதி துப்புரவு பணியாளரான அழகு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் தினகரனுக்கு சக தொழிலாளர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
உயிரிழந்த அழகு, தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதால் உடலை செளதி அரேபியாவில் இருந்து மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் அழகுவின் மகன் தினகரன் தொடர்ந்து மனு அளித்தார்.
 
 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என பலரிடம் மனு அளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், செளதி அரேபியாவில் உள்ள தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய துணை தூதரகத்தின் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் கோரிக்கை விடுத்து வருகிறார்.
 
இது குறித்து தினகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், என் அப்பா அழகு, 1994 ஆம் ஆண்டு முதல் கடந்த 27 ஆண்டுகளாக செளதி அரேபியாவில் சாலை துப்புரவு பணியாளராக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
 
கடைசியாக 2018 ஆம் ஆண்டு எனது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செளதியில் இருந்து என் அப்பா வந்தார், மீண்டும் 2019 ஆம் ஆண்டு செளதி சென்று விட்டார். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29 ந்தேதி எனது அப்பா தற்கொலை செய்து கொண்டதாக அப்பாவுடன் வேலை செய்து வரும் சரவணன் என்பவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். ஆனால் அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை என் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலமாக சந்தோசமாக பேசினார்.
 
என் அப்பாவின் இறப்பில் மர்மம் இருப்பதால் அவரது உடலை தாயகம் அனுப்பி வைக்க உதவும்படி அவர் வேலை செய்த தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. அப்பாவுடன் வேலை செய்த ஊழியர்களிடம் விசாரித்த போது அழகு இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மிகவும் மன உளைச்சலாக இருந்தார். திடீரென அவர் ஒரு காட்டு பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை, நிர்வாகத்திடமும் கேட்க முடியவில்லை. தற்போது உடல் செளதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
 
இதையடுத்து எனது அப்பாவின் உடலை இந்திய தூதரக உதவியுடன் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்டோரிடம் மனு அளித்தேன். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இதுவரை 3 முறை மனு அளித்து விட்டேன். ஆனால், என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என தெரியவில்லை.
 
இறந்து 3 மாதங்களாகியும் எனது அப்பா உடல் சொந்த ஊருக்கு வராததால் என் அம்மா மற்றும் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உடனடியாக அப்பாவின் உடலை தாயகம் எடுத்து வந்து உடற்கூராய்வு செய்து இறப்பில் உள்ள மர்மத்தை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலியரிடம் கருத்து கேட்க பிபிசி தமிழ் முயற்சித்தது ஆனால் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து அலுவலக பணியில் இருந்ததால் பதில் அளிக்கவில்லை. ஆட்சியர் பதில் அளிக்கும் பட்சத்தில் அவரது கருத்து இங்கே வெளியிடப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்