எனது ஆதரவு அதிமுகவிற்கே என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சட்டப்பேரவையில் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கருணாஸின் முக்குலத்தோர் புலிகள் படை கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுகவின் தோழமை கட்சியாக இருந்தது. பின்னர் இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாஸ்.
இதற்கிடையே கடந்த ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசை கடுமையாக விமர்சித்தார். கூவத்தூரில் நான் இல்லாமல் இந்த ராஜாங்கத்தை பழனிச்சாமியால் அமைத்திருக்க முடியுமா என காரசார கேள்விகளையும் முன்வைத்தார். எடப்பாடி அரசு மோடி அரசுக்கு கூஜாவாக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார். அத்தோடு திமுகவின் கூட்டத்திலும் அவர் பங்குபெற்றார். இதனால் அவர் திமுக பக்கம் தாவுவோரோ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். சற்று காலம் கருணாஸின் பேச்சு அடிபடாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், எனக்கு இந்த பதவியை அம்மா ஜெயலலிதா கொடுத்தார். அந்த விஸ்வாசம் எனக்கு இருக்கிறது. ஆகவே இந்த 5 ஆண்டுகளும் எனது ஆதரவு அதிமுகவிற்கே என கூறினார்.
எடப்பாடி அரசு கூஜா அரசு என்றெல்லாம் சொல்லிய கருணாஸ், இப்பொழுது தனது ஆதரவு அதிமுகவிற்கு என கூறியிருக்கிறார். இவரை எந்த லிஸ்டில் சேத்துவது என்றே புரியவில்லை.