Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒளிப்பதிவு திருத்த சட்டத்துக்கு எதிராக முத்தரசன் கண்டனம்!

ஒளிப்பதிவு திருத்த சட்டத்துக்கு எதிராக முத்தரசன் கண்டனம்!
, செவ்வாய், 6 ஜூலை 2021 (15:58 IST)

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவுக்கு எதிராகக் கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இது சம்மந்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, அரசின் கொள்கைகளை விமர்சித்து மக்களை அணி திரட்டி, போராடும் உரிமை என அடிப்படை உரிமைகள் மீது மத்திய பாஜக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய அரசின் அதிகார அத்துமீறலையும், அதன் மோசமான விளைவுகளையும் எதிர்த்துப் போராடுவோர் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில், புதிய சட்டங்களைத் தொடர்ந்து இயற்றி வரும் மத்திய அரசு, தற்போது திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021-ஐக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், திரைப்படங்களில் தாங்கள் விரும்பும் சார்பு கருத்துகள் மற்றும் காட்சிகளை மட்டுமே அனுமதிக்க வழிவகை செய்துள்ளது. மேலும், தணிக்கைத் துறையின் அனுமதி பெற்று புழக்கத்தில் உள்ள பழைய திரைப்படங்களையும் தடை செய்வது, அதன் பல்வேறு காட்சிகளை வெட்டிச் சீர்குலைப்பது என்ற தீய நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது. மேல்முறையீட்டு உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என, குரல் எழுப்பி வருபவர்களைக் குறிப்பாக நடிகர் சூர்யாவைக் குறிவைத்து பாஜக இளைஞரணியும், அதன் ஆதரவு அமைப்புகளும் கலகத்தைத் தூண்டும் மலிவான செயலில் ஈடுபட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக உரிமையைப் பறித்து, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் சீர்குலைவு செயல்களை அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறதுஎனக் கூறப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகதாது குறுக்கே அணை… டிடிவி தினகரன் முதல்வருக்கு அறிவுறுத்தல்!